தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Sunday, November 6, 2011

பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றும் முறை


1. வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்குச் செல்வது போலவே தன்னிடம் இருப்பதில் சிறந்தஆடைகளை அணிந்து செல்ல வேண்டும். இறைவனின் இல்லமாம் பள்ளிவாசலிலோ அல்லது தொழுகைக்காக கூடியுள்ள இடத்திலோ தொழுகையை ஆரம்பிப்பதற்கு முன், இறைவனைப் புகழ்ந்து கூறும் ‘தக்பீர்’ஐ சொல்ல வேண்டும்.
2. பெருநாள் தொழுகையை சூரிய உதயத்திற்கும் நண்பகலுக்கும் இடையிலுள்ள நேரத்தில் நிறைவேற்ற வேண்டும். இதற்கு பாங்கு சொல்லவோ இகாமத் சொல்லவோ தேவையில்லை. பெருநாள் தொழுகைக்கு இரண்டு ரக்அத்களே உண்டு. ஒவ்வொரு ஸூராவிலும் இமாம் பாத்திஹா ஸூராவையும் குர்ஆனின் ஒரு பகுதியையும் உரக்க ஓதுவார். 
3. தொழுகையை அல்லாஹு அக்பர் (இறைவனே மிகப் பெரியவன்) என்ற தக்பீருடன் இமாம் ஆரம்பிக்கிறார். இவ்வாறு மூன்று முறை ஓதுவார். ஒவ்வொரு முறையும் அல்லாஹு அக்பர் என்று கூறும்போது கைகளை காதுகள் வரையிலும் உயர்த்தி, தொங்கவிட வேண்டும். மூன்றாவது முறை தக்பீர் சொல்லி முடித்தவுடன் தொப்புழுக்கு கீழே இடது கரத்தின் மீது வலது கரத்தை வைத்துக்கட்டி நிற்க வேண்டும். பின்பற்றித் தொழுபவர்கள் இமாமை அப்படியே பின்பற்ற வேண்டும்.
4. முதலாவது ரக்அத் முடிந்தவுடன் இமாம் அல்லாஹு அக்பர் என்று சொல்லி இரண்டாவது ரக்அத்தை ஆரம்பிப்பார்முந்திய ரக்அத்தைப் போலவே இந்த ரக்அத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
5. இரண்டு ரக்அத் தொழுகை முடிந்த பிறகு, இமாம் ஒரு சொற்பொழிவாற்றுவார் (குத்பா). இச்சொற்பொழிவில் இரண்டு பாகங்கள் உண்டு. முதல் பாகத்தை முடித்து சற்று இடைவெளிக்குப்பின் இரண்டாவது பாகத்தை ஆரம்பிப்பார். முதலாவது பகுதியை ஒன்பது முறைகள் அல்லாஹு அக்பர் என்று சொல்லி ஆரம்பிப்பார். இந்தச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை சொற்பொழிவைப் போன்று நல்லுரைகளும், அறிவுரைகளும் கொண்டதாக இருக்கும்.
6. நோன்பு பெருநாள் சொற்பொழிவில் பித்ராவைப் பற்றி, அதாவது நோன்பிற்கு பிறகு செய்யவேண்டிய தர்மத்தைப் பற்றி மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். ‘பித்ரா’ கட்டாயம் செலுத்த வேண்டிய வரியைப் போன்றதாகும். வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு ஏழைக்கு திருப்திகரமான சாப்பாட்டையோ அல்லது அதற்கு சமமான தொகையையோ கொடுக்க வேண்டும். தன்னைச் சார்ந்துள்ளவர்கள் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரின் சார்பாகவும் இதே அளவு தானம் செய்ய வேண்டும். உதாரணமாக தன்னைச் சார்ந்துள்ளவர்கள் மூன்று பேர் இருந்தால் தனக்கும் அவர்களுக்கும் சேர்த்து மொத்தமாக நான்கு பேர்களின் சார்பில் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு தரப்படும் தர்மங்களை தொழுகைக்கு முன்னரே வழங்கி விடுவது சிறப்பாகும். ஏனெனில் இதைப்பெறும் ஏழைகள் பெருநாளை மகிழ்ச்சியோடும் உற்சாகத்துடனும் வரவேற்பார்கள்.
7. ஹஜ்ஜுப் பெருநாள் சொற்பொழிவின்போது ‘குர்பான்’ கொடுப்பதன் அவசியத்தை எடுத்து சொல்ல வேண்டும். வசதி படைத்தவர்கள் குர்பான் கொடுப்பது கடமையாகும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வெள்ளாடு அல்லது செம்மறியாடு கொடுத்தால் போதுமானது. ஏழு குடும்பங்களுக்கு ஒரு மாடு அல்லது ஒரு ஒட்டகம் அல்லது ஒரு மான் கொடுத்தால் போதுமானதாகும். பெருநாள் தொழுகை முடிந்தவுடன் இவற்றை அறுத்துக் கொடுப்பது விரும்பத்தக்கதாகும். ஆனாலும், இரண்டாவது அல்லது மூன்றாவது நாளில் அறுத்துக் கொடுத்தாலும் அது ஏற்புடையதாகும். ‘குர்பான்’ செய்யப்பட்ட இறைச்சியை பற்றி புனித குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது: “அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங்கள். ஏழைகளுக்கும், இரப்பவர்களுக்கும் அதனைக் கொடுங்கள்.” (22:36) அதே பகுதியில் புனித குர்ஆன் மேலும் பின்வருமாறு கூறுகிறது:
”குர்பான் கொடுக்கப்பட்ட இறைச்சியோ அதன் குருதியோ இறைவனைப் போய் சேருவதில்லை. அடியார்களின் பக்தி தான் அவனைப் போய்ச் சேரும்”
‘தக்பீர்’ என்ற இறைவனைப் புகழும் முழக்கம் இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன்பும் ஹஜ்ஜுப் பெருநாளை அடுத்த மூன்று நாட்களிலும் முழங்கப்படுகின்றது. இது தக்பீருத் தஷ்ரீக் என்று அழைக்கப்படுகின்றது.
தக்பீர் பின்வருமாறு:
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்,
லாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து
அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்துலில்லாஹி கஸீரா
வ ஸுப்ஹானல்லாஹி புக்ரத்தன் வஅஸீலா
லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹ், ஸதக்க வஃதஹ்
வ நஸர அப்தஹ், வ அஅஸ்ஸ ஜுன்தஹ்,
வஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்
லாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு
முஃலிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல் காஃபிரூன்
அல்லாஹும்ம ஸல்லி அலா சையிதினா முஹம்மதின்
வஅலாஆலி சையிதினா முஹம்மதின்,
வஅலா அஸ்ஹாபி சையிதினா முஹம்மதின்
வஅலா அன்சாரி சையிதினா முஹம்மதின்
வஅலா அஜ்வாஜி சையிதினா முஹம்மதின்
வஅலா துர்ரிய்யத்தி சையிதினா முஹம்மதின்
வஸல்லிம் தஸ்லீமன் கஸீரா.
தக்பீரின் பொருள்.
இறைவனே உயர்ந்தவன் (மூன்று முறை)
இறைவன் ஒருவனே! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
இறைவன் உயர்ந்தவன்! (இரண்டு முறை) எல்லாப்புகழும் இறைவனுக்கே! நிச்சயமாக இறைவன் உயர்ந்தவன்.
எல்லாப்புகழும் அவனுக்கே உரியன.
அல்லும் பகலும் அவனுக்கே புகழ்! இறைவன் ஒருவனே! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை! அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினான்.
தனது அடியாரான முஹம்மதை ஆதரித்தான். தன்னுடைய வீரர்களுக்கு முழுமையான வெற்றியை நல்கினான்.
பகைவர்களை நிச்சயமாக தோல்வியடையச் செய்தான். ஒரே இறைவனைத் தவிர வேறு இறைவன் இல்லை!
நிராகரிப்போர்கள் வெறுத்தபோதிலும் அவனையே நாங்கள் உண்மையான பக்தியோடு வணங்குவோம்.
இறைவனே! எங்கள் தலைவர் முஹம்மதுவை பின்பற்றுபவர்கள் மீதும்,
எங்கள் தலைவர் முஹம்மதுவின் தோழர்கள் மீதும்,
எங்கள் தலைவர் முஹம்மதுவின் ஆதரவாளர்கள் மீதும்,
எங்கள் தலைவர் முஹம்மதுவின் பிராட்டியார்கள் மீதும்,
எங்கள் தலைவர் முஹம்மதுவின் கிளைஞர்கள் மீதும், மேன்மைகளையும், பாக்கியங்களையும் பொழிந்தருள்வாயாக!
அவர்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் அருள்வாயாக!

பெருநாள் தொழுகைகள்


ஈத் என்றால் விழா அல்லது மீண்டும் மீண்டும் வரும் மகிழ்ச்சி என்று பொருள். முஸ்லிம்கள் அனைவருக்கும் பெருநாள் தொழுகை மிக முக்கியமானதாகும். இது அன்றாடத் தொழுகையின் சிறப்புக்களையும், ஜும்ஆத் தொழுகையின் பலன்களையும் கொண்டது. இது முஸ்லிம்களின் பிணைப்புகளை வலுப்படுத்தும் தன்மையைக் கொண்டது.
பெருநாள்கள் இரண்டு முதலாவது ‘ஈதுல் பித்ர்’ என்று சொல்லப்படும் நோன்புப் பெருநாளாகும். அது ரமளான் மாதத்தை அடுத்துவரும் (முஸ்லிம் ஆண்டின் 10-வது மாதம்) ஷவ்வால் மாதம் முதல் நாளில் வரும். ரமளான் மாதத்தில் தான் குர்ஆன் அருளப்பட்டது. அதே மாதத்தில் தான் நோன்பும் நோற்கப்படுகின்றது. இரண்டாவது பெருநாள் ’ஈதுல் அள்ஹா’ (தியாகப் பெருநாள்) முஸ்லிம் ஆண்டின் இறுதி மாதமான ‘துல்ஹஜ்’ பத்தாம் நாளில் இது வருகிறது. இது ஹஜ் கடமையின் (மக்கா யாத்திரை) நிறைவை ஒட்டி கொண்டாடப்படுவதாகும். 
இஸ்லாமியப் பெருநாட்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததாகும். வேறு எந்த மதத்திலும் அல்லது சமூக, அரசியல் அமைப்பிலும் இதற்கு ஈடான ஒன்றைக் காண முடியாது. மிக உயர்ந்த ஆன்மீக ஒழுக்கத் தன்மைகளோடு தனிப்பண்புகள் பலவற்றையும் அவை பெற்றிருக்கின்றன.
1. இறைவனுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் ஆற்றிய கடமையின் நிறைவைக் கொண்டாடுவது தான் ஈதின் நோக்கமாகும். முதல் பெருநாள் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்காகக் கொண்டாடப்படுகின்றது.
2. தங்களுடைய ஆன்மீகக் கடமைகளைப் பூர்த்தி செய்வதில் இறைவன் உதவியதற்காக அவனுக்கு நன்றி சொல்லும் முகத்து, முஸ்லிம்கள் அனைவரும், சகோதரத்துவ உணர்வோடும், மன மகிழ்ச்சியோடும் கூடும் நாள் தான் ஈத் என்பதாகும். இவ்வாறு நன்றி செலுத்துவது வெறும் பேச்சோடு முடிந்து விடுவதில்லை. அதற்கப்பாலும் சென்று அது சமூக உணர்வுகளையும், மனிதாபிமான உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. ரமளான் மாதத்து நோன்பினை வெற்றிகரமாக நிறைவு செய்த முஸ்லிம்கள் ஏழை எளியவர்களுக்கு நோன்பு பெருநாளில் தானதர்மங்கள் செய்வதன் மூலமாக (இறைவனுக்குத்) தங்களது நன்றியை வெளிப்படுத்துகின்றார்கள்.
அதுபோலவே (ஹஜ் பெருநாள்) ‘ஈதுல் அள்ஹா’ அன்று ஹஜ் கடமையை நிறைவேற்றிய முஸ்லிம்களும் ஏனைய முஸ்லிம்களும் புசிப்பதற்குத் தகுந்த பிராணிகளை அறுத்து எளியவர்களுக்கு பங்கீட்டித் தந்து (குர்பான்) தங்களுடைய நன்றியை வெளிப்படுத்துகின்றார்கள். தானதர்மங்களையும், குர்பானி பொருட்களையும் வழங்குவது பெருநாட்களின் மிக முக்கியமான அம்சங்களாகும். இவ்வாறு நன்றி செலுத்துவது ஆன்மீக உணர்வையும், மனிதாபிமான உணர்வையும் ஒருங்கிணைக்கும் ஒரு உன்னத செயலாகும். இந்த மாண்பினை இஸ்லாத்தை தவிர வேறு எங்கும் காணவியலாது.
3. ஒவ்வொரு பெருநாளும் இறைவனை நினைவு கூறும் புனிதத் திருநாளாகும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையிலும், முஸ்லிம்கள் இறைவனைத் தொழுதே அந்த நாளை தொடங்குகின்றார்கள். இறைவன் தங்களுக்கு அருளிய நலன்களையும், பலன்களையும் நினைவு கூறும் வகையில் அவனைத் தொழுது அவன் திருநாமத்தைப் போற்றிப் புகழ்கிறார்கள். அதோடு இறந்து போனவர்களின் ஆத்ம நலனுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள்.
வறியவர்களுக்கு உதவி செய்கிறார்கள். துன்பங்களில் உழல்பவர்களுக்கு கருணை காட்டுகிறார்கள். நோயுற்றவர்களை சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறுகின்றார்கள். தங்களைப் பிரிந்து வெளியூர்களுக்குச் சென்றுள்ள நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துக்கள் அனுப்பி அவர்களையும் எண்ணிப் பார்க்கின்றார்கள். இப்படி எல்லோரையும் எண்ணிப் பார்க்கின்ற ஒருநாளாக ஈதுப் பெருநாள் இலங்குகின்றது.
4. ஒவ்வொரு ஈதுப் பெருநாளும் ஒரு வெற்றித் திருநாளாகும். தனது கடமைகளை நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் நிறைவேற்றி வந்த ஒவ்வொருவரும் வெள்ளியாளராவார். அவர் தமது ஆசைகளின் மீது பலமான கட்டுப்பாடு உள்ளவராகவும், சுயகட்டுப்பாடு உள்ளவராகவும், சுயகட்டுப்பாடு கொண்டவராகவும், கட்டுப்பாடான வாழ்க்கையை விரும்புபவராகவும் இருக்கிறார் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகின்றார். ஒருவர் இத்தகைய பண்புகளை பெற்றுவிட்டால், அவர் ஒரு மாபெரும் வெற்றியை அடைந்து விட்டார் என்று அர்த்தமாகும். ஏனெனில் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளவும், தன்னுடைய ஆசைகளை முறைப்படுத்திக் கொள்ளவும் அறிந்துகொண்ட ஒருவர் பாவம், தவறு, அச்சம், பலவீனம், கேவலம், பொறாமை, பேராசை, ஏளனம் இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விடுபட்டவராவார். இந்த விடுதலையின் அடையாளமே ‘ஈத்’ பெருநாளாகும். இந்த பெருநாளை வரவேற்கும்போது அவர் உண்மையிலேயே தனது வெற்றிக்கு விழா எடுக்கின்றார் என்றே பொருள். ஆகவே ஈத் எனும் பெருநாள் ஒரு வெற்றித் திருநாளாகும்.
5. ஒவ்வொரு ஈத் பெருநாளும் நன்மைகளின் அறுவடை நாளாகும். இறைபணியில் ஈடுபட்டிருந்த நல்லடியார்கள், நம்பிக்கையாளர் அனைவரும் தங்களது நற்செயல்களுக்கான பலன்களை அந்தப் பெருநாளன்று அறுவடை செய்கின்றார்கள். இறைவனும் தனது கருணையையும் பாக்கியங்களையும் வாரி வழங்குகின்றான்.
சகோதரத்துவம், அன்பு, பரிவு, பாசம் இவற்றை முஸ்லிம்கள் ஏனையோருடன் பரிமாறிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பெருநாளிலும் எல்லா முஸ்லிம்களுமே நன்மையை அடைகிறார்கள். தன்னைப் போன்ற நம்பிக்கையாளர்களின் நலனில் அக்கறை கொள்ளும் நம்பிக்கையாளர்களுக்கு அன்று இறைவன் தன் அருட்கொடைகளை அள்ளித் தருகின்றான். வறியவர்களுக்கு அன்றைய தினம் இறைவனின் அருளோடு சக நம்பிக்கையாளர்களின் அன்பளிப்புகளும், அன்பும் கிடைக்கின்றன. ஆகவே ஒவ்வொரு பெருநாளும் இறைவனின் கருணை, அன்பு ஏனைய முஸ்லிம்களின் அன்பளிப்பு, பாசம், பரிவு இவற்றின் அறுவடை நாளாகும்.
6. ஒவ்வொரு ஈத் பெருநாளும் பாவமன்னிப்புப் பெறும் நாளாகும். முஸ்லிம்கள் அனைவரும் பெருநாள் தொழுகைக்கு ஒன்றாக கூடும்போது, இறைவனிடம் மன்னிப்புக் கோருகின்றார்கள். தங்களது நம்பிக்கை மேலும் உறுதிபெற இறைஞ்சுகின்றார்கள்.
தூய்மையான உள்ளத்தோடு தன்னிடம் கோருகின்றவர்களுக்கு மன்னிப்பு அருளுவதாக இறைவன்உறுதி கூறுகின்றான். பெருநாள் தொழுகைகாக குழுமுகின்ற அந்த புனிதக் கூட்டத்தில், இன்னொரு நம்பிக்கையாளருக்கு எதிரான எண்ணங்களை கொள்வதற்கு ஒரு முஸ்லிம் வெட்கப்படவே செய்வார். சகோதரத்துவமும் ஆன்மீகமும் ஒருங்கிணைந்து விளங்கும் இந்தக் கூட்டத்தில் மகிழ்ச்சியும் நல்லெண்ணமுமே எல்லோர் உள்ளத்திலும் இருக்கும். தீய எண்ணங்கள் எதுவும் அவர்களின் உள்ளங்களில் இருக்காது. அப்படி ஏதேனும் தீய எண்ணங்கள் ஒருவரிடம் தலைதூக்குமேயானால், அதனை அவர் அகற்றிடுவார். தன்னுடைய இதயத்தையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவதற்காக பெருநாளின் புனிதமான சூழ்நிலையில் அவர் மற்றவர்களுடன் கலந்து பழகுவார். இந்த நல்ல நாளில் தனக்கு தீங்கிழைத்தவர்களை அவர் மன்னிப்பார். ஏனெனில் அவர் இழைத்த தவறுகளுக்காக அவரும் இறைவனிடம் மன்னிப்புக் கோரும் நாளாகும் அது. இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்காக தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் செய்கிறார். இறையச்சம் மிகுந்திருக்கும் இந்தக் கூட்டத்தின் புனிதமான நிலை, அவர் மற்றவர்களை மன்னித்தால் அவரை இறைவன் மன்னிப்பான் என்ற தத்துவத்தை அவருக்கு புகட்டுகின்றது. அவர் மன்னிக்கும்போது இறையருள் அவருக்கு கிடைக்கின்றது. இப்படி ஒவ்வொரு பெருநாளும் பாவமன்னிப்பு பெறும் நாளாகிறது.
7. ஒவ்வொரு பெருநாளும் ஓர் அமைதி நாளாகும். இறைவனின் வழிகாட்டுதலின் வழி வாழ்வதன் மூலம் ஒரு முஸ்லிம் தன் இதயத்திலே அமைதியை நிலைநாட்டுகின்றார். இதன் மூலம் இறைவனுடன் ஓர் அழிக்க முடியாத அமைதி உடன்படிக்கையை செய்து கொள்கிறார். இதன் விளைவாக அவர் தன்னை சுற்றியுள்ள உலகத்தோடும் அமைதியோடு வாழ்கிறார். ஒருவர் ஈத் எனப்படும் பெருநாளை மன மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார் என்றால், அவர் இறைவனுடன் தான் கொண்ட அமைதி உடன்படிக்கையை நிறைவேற்றுகின்றார் என்றே பொருள். ஆகவே ஈத் எனப்படும் பெருநாள் ஓர் அமைதித் திருநாளாகும்.
இதுவே பெருநாட்களின் பொருளாகும். அது ஒரு அமைதி நாள். நன்றி செலுத்தும் நாள். மன்னிப்பு நாள். வெற்றியின் விழா நாள். நன்மையை அறுவடை செய்யும் நாள். சாதனைகள் நிறைவடைந்த நிறைவு நாள். நல்லோர்களையும், நண்பர்களையும் நினைவுகூரும் நாள். இவற்றிற்கெல்லாம் மேலாக அது இஸ்லாத்தின் நாள். இறைவனின் நாள்

இந்தியா முழுவதும் தரத்துடன் கூடிய இலவச முன்மாதிரி பள்ளிக்கூடம்


ஆஸிம் பிரேம்ஜி இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு இலவச முன்மாதிரி பள்ளிக் கூடங்களை ஆரம்பிக்க திட்டம்.
இந்தியாவின் மூன்றாவது பணக்காரர், தன்னுடைய சொந்த செலவில் நடத்தப்படும் Azim Premji Foundation (APF)மூலமாக நல்லெண்ணத்தின் தொடக்கமாக, நாடு முழுவதும் மாவட்டத்திற்கு இரண்டு என்று, 1300 இலவச பள்ளிக்கூடங்களை, கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடங்கள் அந்தந்த மாநிலத்தின் தாய்மொழியுடன் மற்றும் கல்வித்திட்டத்துடன் இணைக்கப் பெற்றதாகவும் இருக்கும். இந்த திட்டம் வெற்றி பெற்றால், இந்தியாவின் பொதுவான கல்விக் கொள்கைக்கு சவாலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், மற்ற செல்வமிகுந்த தொழிலதிபர்களுக்கு உந்துதலாகவும் இருக்கும்.
இந்த பள்ளிக் கூடங்கள் வழக்கமான 1 முதல் 12 வரையிலான வகுப்புகளை கொண்டிருக்கும். ஒரு வளர்ந்த நாட்டின் அடிப்படைத் தேவையான தரமான கல்வி மட்டுமே மற்ற பள்ளிக் கூடங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் என்று ஆஸிம் பிரேஜி கூறினார். விப்ரோவின் APFஆல் 2001 ல் தொடங்கப்பட்டு, சமீபத்தில் அதன் வளர்ச்சித் திட்டங்களை மீளாய்வு செய்தபோது, 1300 பள்ளிக்கூடங்கள் திட்டம் உதயமானது. ICSE/CBSE போல ஒரு தனிப்பட்ட கல்விக் குழுமத்தை அமைப்பது எங்களுடைய ஒரு குறிக்கோள் என்று APFன் CEO திலீப் ரஞ்சேகர் கூறினார்.
சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்தோடு கூடிய மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிதான் இந்த பள்ளிக் கூடங்களின் நோக்கமாக இருக்கும் என்று இந்த 9,000 கோடி ரூபாய் திட்டத்தோடு தொடர்புடையவர்கள் தெரிவித்தனர். எங்களுடைய இந்த முயற்சி, கல்வியிலே வளர்ச்சியடையாத இடங்களில் இந்த பள்ளிக் கூடங்களை நிறுவுவது தானே தவிர தற்போது உள்ள பொது மற்றும் தனியார் பள்ளிகளோடு போட்டியிடுவதற்கல்ல என்றும் திலீப் அவர்கள் கூறினார்கள்.
கர்நாடகா, ராஜஸ்தான், உத்தர்காண்ட் மாநிலங்களில், ஒன்றரை வருடத்தில் 7 பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்படும். எதிர்பார்ப்பது போல் எல்லாம் சரியாக நடக்கும்போது, 2025 ம் வருடத்தில் 1300 பள்ளிக் கூடங்களும் இயங்க ஆரம்பித்துவிடும். மற்ற பள்ளிக் கூடங்களுக்கு, தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை கொடுப்பதற்கும், நம்மை நாமே தரமான கல்வியை கற்று போதிப்பதற்கு ஆட்படுத்திக் கொள்வதற்குமான இரட்டை கொள்கைதான் இந்த பள்ளிக் கூடத்தின் பின்னனியில் உள்ளதாகும்.
நன்றி: டைம்ஸ் ஆஃப்ஸ் இந்தியா

மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்!


ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான குர்ஆனையும், முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதனையையும் படித்து மார்க்க அறிவை பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்-குர்ஆன் இறக்கியருளப் பெற்றது …” (அல்-குர்ஆன் 2:185)
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்-குர்ஆன் 44:58)
ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்-குர்ஆன் 43:1-3)
அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்-குர்ஆன் 12:1-2)
இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்-குர்ஆன் 16:2)
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது); ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்; அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்-குர்ஆன் 41:2-4)
தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். (அல்-குர்ஆன் 18:1-3)
(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 43:43-44)
முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: -
“ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்” (திர்மிதி)
“இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக, இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொண்டிருக்கும்போது யார் உயிர் நீத்தார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள்” என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
யார் ஒருவர் தன்னுடைய சகோதரனை இந்த உலக ஆசைகளின் துன்பங்களில் இருந்து நீக்குகிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களில் இருந்து நீக்குவான். யார் ஒருவர் இந்த உலகத்தில் ஒரு முஸ்லிமின் குற்றத்தை மறைக்கிறாறோ, அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய குற்றத்தை மறைப்பான்; தன்னுடைய சகோதரனுக்கு பின்னால் இருந்து உதவி செய்யக் கூடியவனுக்கு,  அல்லாஹ் அவரின் பின்னால் இருந்து உதவி செய்வான். அறிவைப் பெறுவதற்காக யார் நடந்து செல்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் அவருடைய பாதையை இலகுவாக்குகிறான்; சொர்க்கத்திற்கான வழியையும் காட்டுகிறான்; யாரெல்லாம் அல்லாஹ்வின் இல்லத்தில் ஒன்று கூடி குர்ஆனை ஓதி, பிறருக்கும் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளும் மலக்குகளும் சுழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் உள்ளவர்களிடம் அவர்களைப்பற்றி சிலாகித்துக் கூறுவான். (திர்மிதி)
முஹம்மது நபி (ஸல்) நவின்றுள்ளார்கள்: -
இரவில் ஒரு மணி நேரம் மார்க்க அறிவைப் பெறுவதற்காக வெளியே செல்வது முழு இரவிலும் நின்று வணங்கி செலவழிப்பதை விட சிறந்தது. (திர்மிதி)
இறை இல்லத்தில் இரண்டு கூட்டங்களின் பக்கம் (நபி {ஸல்}) சென்றார்கள்; இரண்டு வகுப்பினரும் சிறந்தவர்கள் என்றாலும், ஒரு வகுப்பினர் மற்றொரு வகுப்பினரைவிட சிறந்தவர். ஒரு வகுப்பினர் அல்லாஹ்விடம் துவா கேட்டுக் கொண்டிருந்தனர். அல்லாஹ் நாடினால் அவர்கள் கேட்டதை அவர்களுக்கு வழங்குவான் அல்லது தாமதப்படுத்துவான்; மார்க்கத்தைப் புரிந்து கொள்வதற்காக மார்க்க அறிவைப் பெற முயற்சித்து அதை அறியாதவர்களுக்கும் கற்பித்துக் கொண்டும் அந்த இரண்டாம் வகுப்பினரே சிறந்தவர். நிச்சயமாக நான் ஒரு கற்றுக் கொடுப்பவனாகவே அனுப்பப்பட்டுள்ளேன்” என்று சொல்லி அவர்களிடையே அமர்ந்து விட்டார்கள்.
இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெறுவது ஒவ்வொரு பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் ஒரு மனதாக குரல் கொடுக்கின்றனர்.
ஒரு சில மக்கள் தான், மார்க்க அறிவைப் பெருவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக, வெட்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை சொல்லி தங்களுடைய செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.
மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் முயற்சிக்க வேண்டும் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
நன்றி : www.islamhelpline.com

அரசு பயங்கரவாதத்தை உலகம் எதிர்த்தே ஆகவேண்டும்!


நவீன காலத்தில் ஏகாதிபத்தியத்தின் அராஜகத்தால் பாதிக்கப்படுவோர் பலவிதத்தில் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் குடிமக்கள் முதல் ஈராக்கின் அதிபராக பதவி வகித்த சதாம் ஹுஸைன் வரை ஏராளமானோர் ஏகாதிபத்தியத்தின் பலிகடாக்களாவர்.
முதலாளித்துவம் உலகமெங்கும் பரவிய காலம் முதல் அதன் சுய விருப்பங்களுக்கு அடிபணிய மறுத்தவர்களை நிம்மதியாக வாழ விட்டதில்லை.
அன்றிலிருந்து இன்றுவரை முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம் என கூறுகின்றன. ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் ஆட்சியாளர்களை தூக்கியெறிந்து, லட்சக்கணக்கான மக்களை படுகொலைச்செய்து, அந்நாட்டின் வளங்களை கொள்ளையடித்த பிறகும் அவர்கள் கூறுவது என்னவெனில் நாங்கள் சுதந்திரத்தின் சுவிஷேசகர்கள் என்பதாகும்.
ஜனநாயகத்தையும், நாகரீகத்தையும், நவீன காலத்தின் மதிப்பீடுகளையும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு கற்றுக்கொடுக்கவந்தோம் எனவும் கூறிக்கொள்கிறார்கள். இந்த பெரும் பொய்யை சில மேற்கத்திய ஊடகங்களும், மூளைக்குழம்பிய சில வலதுசாரி அறிவுஜீவிகளும் இந்த காலத்திலும் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
ஆப்கானிலும், ஈராக்கிலும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி சில மேற்கத்திய அறிஞர்கள் எழுப்பிய வாதங்களும் இதுவேயாகும். ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளுக்கு பலியானவர்களுக்கே இது முழுக்க முழுக்க கட்டுக்கதை என்பது தெளிவாக தெரியும்.தற்பொழுது மேற்கத்திய சமூகத்தின் அதன் அறிவுரீதியான தொழில்நுட்பரீதியான வெற்றியின் சந்ததியான விக்கிலீக்ஸிற்கு இதே கதிதான் ஏற்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் மேற்கத்திய ஊடகங்களுடன் உலகின் பல்வேறு ரகசியங்களை வெளிக்கொணர்ந்தது.கென்யாவின் ஊழல், ஐவரிகோஸ்டின் இராசயன கழிவுகளை கடலில் கொட்டியது, குவாண்டனாமோ சிறையில் நடக்கும் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகள், ஈராக், ஆப்கான் போர் ரகசியங்கள் என பல்வேறு ரகசிய செய்திகளை விக்கிலீக்ஸ் வெளிச்சம்போட்டு காட்டியது. மக்களின் தகவல்களை அறிந்துக்கொள்ளும் உரிமையை சரியான முறையில் பயன்படுத்தியது விக்கிலீக்ஸ். பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்களின் உண்மையான முகத்தை மக்களுக்கு முன்னால் திறந்து வைத்தது. சரி எது? தவறு எது? என்பதை அடையாளம் காணவும் தெளிவான நிலைப்பாடுகளை மேற்கொள்ளவும் அது உலக மக்களுக்கு உதவியது.
ஆனால், விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்டதன் மூலம் கதை மாறியது. இப்பொழுது அமெரிக்காவிற்கு உஸாமாவை விட மிகப்பெரிய தீவிரவாதி ஜூலியன் அஸாஞ்ச் ஆவார். கருத்து சுதந்திரத்தின் காவலாளிகள் எனக்கூறும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் இரட்டைவேடம் விக்கிலீக்ஸ் விவகாரத்தில் கலைந்தது.
விக்கிலீக்ஸிற்கு பொருளாதார உதவிகள் வரும் அனைத்து வழிகளையும் அமெரிக்காவும் அதன் கூட்டணிநாடுகளும் அடைத்துவிட்டன.அஸாஞ்ச் மீது ஏராளமான வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்கான எவ்வித வழியும் யாருக்கும் இனி கிடைக்க வாய்ப்பில்லை. ஏகாதிபத்தியத்தின் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து விக்கிலீக்ஸ் தனது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
ஆனால், அது வேட்டைக்காரர்களின் கடைசி வெற்றியாக மாறிவிடக்கூடாது. ஏனெனில் விக்கிலீக்ஸ் திறந்த மனங்களைக்கொண்ட சமூகத்தினருக்கு இன்றியமையாததாகும். அதற்கெதிரான அரசு பயங்கரவாதத்தை உலகம் எதிர்த்தே ஆகவேண்டும்!

மனிதப்படைப்பின் நோக்கம்!

மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி மட்டும் ஏன் தான் இந்த மனித இனம் சிந்திக்காமல் இருக்கின்றதோ நமக்குத் தெரியவில்லை!
இன்னும் ஒரு விடயம் என்னவென்றால், ஏதாவது ஒரு பொருள் உருவாக்கப்பட்டு அதன் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம் நிறைவேறாத போது அது ஓரங்கட்டப்படுவதையும் நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம். எனவே நிச்சயமாக மனிதப்படைப்பிற்க்கு ஒரு உயர்ந்த நோக்கம் இருக்கத்தான் வேண்டும் என்பதனை உலக நடப்புக்களே நமக்கு உணர்த்துகின்றன.
உலக மதங்கள் மனிதப் படைப்பின் நோக்கம் பற்றி பல்வேறுபட்ட காரணங்களைக் கூறுகின்றன. உதாரணமாக சில மதங்களின் கோட்பாடுகள், கடவுள் விளையாடுவதற்காகத் தான் மனிதனைப் படைத்ததாகக் கூறுகின்றது. இதைத்தான் ‘கடவுள் இரண்டு பொம்மையைச் செய்தான் தான் விளையாட; அவையிரண்டும் சேர்ந்தொரு பொம்மையைச் செய்தன தான் விளையாட’ என்று ஒரு தமிழ்க் கவிஞர் பாடியிருக்கிறார். இவ்வாறு தான் ஒவ்வொரு மதமும், சித்தாந்தமும் பல்வேறுபட்ட கருத்துக்களைக் கூறிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இஸ்லாம் மட்டுமே மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்விக்கு பின் வரும் ஓர் உயர்ந்த நோக்கத்தைக் குறிப்பிடுகின்றது.

قال تعالى : وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
என மனிதனைப் படைத்த அல்லாஹ், மனிதன் படைக்கப்பட்ட நோக்கத்தை இவ்வாறு கூறுகிறான்.

ஒவ்வொரு மனிதனது சிந்தனையும், எண்ண ஓட்டங்களும் வேறு படுவதாலும், அடிக்கடி அவனது சிந்தனை மாறுபடுவதாலும், கால ஓட்டத்தினால் உலகில் பற்பல மாற்றங்கள் உருவாதலினாலும் மனிதனுக்கு ஒரு நடுநிலையான, தொடர்ச்சியான வழிகாட்டுதல் எப்போதும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அதனால் மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் வழி தவறாமல் இருப்பதற்காக எல்லாக் காலங்களிலும் தனது தூதர்களை அச்சமூகங்களில் இருந்து தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு தனது இறைச் செய்திகளைக் கொடுத்து அனுப்பி நேர்வழி காட்டி இருக்கிறான்.
இந்த சங்கிலித் தொடரான வழிகாட்டுதல் இல்லாமல் போகின்ற போதுதான் மனிதன் மிருகத்தைவிட மோசமான நிலைக்குப் போவதையும், மிருகத்தை விட கீழ்த்தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதையும் பார்க்கின்றோம். இதனைக் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் கலாச்சாரம், நவீனம், புதுமை என்ற பெயர்களில் சில கூட்டத்தினரையும், அதே போன்று பிறந்தது போலவே வாழ்வோம் என்ற கொள்கையில் நிர்வாண கோலமாக வாழ்ந்து கொண்டு எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV கிருமிகளை உலகுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு வாழ்வதையும் பார்க்கின்றோம். சகிக்க முடியாத இந்த வாழ்க்கை முறை சமூகத்தை சாக்கடைக்குக் கொண்டு செல்கின்றன. இது ஒரு எடுத்துக் காட்டு ஆகும்.

மனிதன் உலக வாழ்க்கையிலும் உயர்ந்த நிலையில் வாழ்ந்து மறுமையிலும் உயர்ந்த வாழ்க்கையாகிய சுவனச் சோலையைச் சுவீகரித்துக் கொண்டவனாக மாற வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் நோக்கமாகும்.

மனிதன் ஏன் படைக்கப்பட்டான்? என்ற கேள்வியை மக்கள் மன்றத்தில் வைத்தோமானால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பல்வேறுபட்ட கோணங்களில் பதில்களை முன் வைப்பார்கள்.

அதேபோன்று மனிதனுக்கு மட்டும் ஆறறிவு கொடுக்கப்பட்ட நோக்கம் என்ன? என்று கேட்டால் அதற்கும் பல்வேறுபட்ட காரணங்களையும் நோக்கங்களையும் மனிதன் கூறுவான். உதாரணமாக, இந்த உலகில் மிகவும் அழகாக வீடு, வாசல்களை உண்டாக்கி வாழ அல்லது வாழ்க்கை முடியும் வரைக்கும் நல்ல நல்ல உணவுகளைக் கண்டு பிடித்து உண்டு உயிர் வாழ அல்லது பற்பல சாதனைகளை நிகழ்த்த என்று அடுக்கிக் கொண்டே போவார்கள். உண்மையில் மனிதன் நிதானமாக, நடுநிலைத் தன்மையோடு சிந்தித்தால், இது போன்ற காரணங்கள் அனைத்தும் முழுமையற்ற, மேலோட்டமான காரணங்களாகும் என்பதனை உணர்ந்து கொள்வான். ஏனெனில் மேற்கூறப்பட்ட காரணங்களை உள்ளடக்கிய அனைத்துப் பணிகளையும் மனிதனல்லாத மிருகங்கள், பட்சிகள், ஊர்வன போன்ற அனைத்தும் தினமும் செய்து கொண்டுதான் இருக்கின்றன. இது போக சில படைப்பினங்கள் மனிதனை விடவும் மிக நேர்த்தியாக, பிறர் உதவியில்லாமல் தமது காரியங்களையும் முறையாக நிவர்த்தி செய்து கொள்வதையும் நாம் பார்க்கத்தான் செய்கின்றோம்.

உதாரணமாக, பறவைகளில் தூக்கனாங் குருவியைப் போல் நம்மால் மிகமிக நுற்பமாக கூடு கட்டவே முடியாது! அதன் கூடு மெல்லிய நாறுகளினால் பின்னப்பட்டது, காற்றில் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருக்கும். மழையில் கூட நனையாது! எத்தனை ஆரோக்கியமான அறைகள்! முட்டையிட்டு அடைகாப்பதற்கு ஏற்ற முறையில் ஒரு தனியறை, முன் வாயிலறை, ஆண் குருவிக்கு வேறு அறை! இது மட்டுமா இரவு நேரங்களில் சூடற்ற குளிர்ந்த மின்விளக்குகள்! மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து வந்து கூட்டினுல் ஒட்டி வைத்து விடும், அது இறந்து விட்டால் வேறொன்றைப் பிடித்து வந்து ஒட்டி வைத்து விட்டு இறந்து போன பூச்சியை அகற்றி விடும். மனிதன் கூட தற்போது தான் மின் விளக்குகளைக் கண்டுபிடித்தான்.


இவ்வாறு அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன, பிறர் தேவையற்று தத்தமது தேவைகளை நிறை வேற்றுவனவாகத்தான் இருக்கின்றன. மனிதன் மட்டும் தான் மிகவும் பலவீனமுள்ளவனாகவும், பிறர் உதவியில் தங்கியிருப்பவனாகவும் காலத்தைக் கடத்துகின்றான். எனவே, நாம் கட்டாயம் சரியாகச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். உதாரணமாக, ஒரு சாதாரன பேனா வாங்கப் போனாலும் கூட நன்றாக நமது மூளையை உபயோகித்துத்தான் அந்தப் பேனாவை வாங்குகின்றோம். இந்தப் பேனா சிறந்ததா அல்லது மற்றதுவா?, இந்த நாட்டு உற்பத்தி சிறந்ததா அல்லது அந்நாட்டு உற்பத்தி சிறந்ததா?, கருப்பு நல்லதா நீலமா? என்று எத்தனை எத்தனை கேள்விகளைக் கேட்டு வியாபாரியைக் குடைகிறோம். அத்தோடு எழுதிப் பார்ப்பதற்கும் தவறுவதில்லை. சில நேரங்களில் அந்தப் பேனா எழுதாமல் போனால் கடைக்காரனை திட்டி விடுகிறோம்.
ஒரு பேனாவுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் கூட, நமக்கும் ஏக தெய்வத்திற்கும் இடையே இருக்கும் நிஜமான தொடர்பு பற்றித் தெறிந்து கொள்வதற்குக் கொடுப்பதில்லையே என்று நினைக்கும் போதுதான் வேதனையாக இருக்கின்றது.

நாம் சாதாரன ஒரு பொருள் வாங்குவதில் காட்டும் அக்கரையை விட பன்மடங்கு அக்கரையை நம் விடயத்திலும், நம் மதம் குறித்த விடயத்திலும், நாம் எதற்காப் படைக்கப் பட்டோம் என்ற கேள்விக்கு சரியான விடை காண்பதிலும் நாம் ஒவ்வொருவரும் ஆர்வம் காட்ட வேண்டும். இது ஒவ்வொரு புத்தி சுவாதீனமுள்ள ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும்.

நாம் மேலே குறிப்பிட்டுக் காட்டியுள்ள ‘ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை’ (51:56) என்ற அல்-குர்ஆன் வசனமானது மிகவும் ஆழமான கருத்தை உள்ளடக்கியுள்ளது.

மேலோட்டமாக இவ்வசனத்தை வாசிக்கும் ஒருவர், தொழுகை, நோம்பு, ஸகாத்து, ஹஜ் போன்ற இன்னும் இதர வணக்கங்களிலேயே நம் காலத்தைக் கடத்தினால் ஏனைய விடயங்களில் நாம் ஈடுபடுவதில்லையா? உழைக்க வேண்டாமா? உண்ண வேண்டாமா? உறங்க வேண்டாமா? குடும்பம் நடத்த முடியாதா? போன்ற கேள்விகளைக் கேற்கலாம். அப்படியானால் இவ்வசனத்தின் கருத்துத்தான் என்ன?

அதாவது வணக்கம் என்பதனை சுருங்கக் கூறின், அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களை கவனத்திற் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாகும். அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி காட்டுதல்களுக்கமைய நம் ஐம்பெரும் கடமைகள் முதல் தினசரி வாழ்க்கை அம்சங்களும் அமையுமாக இருந்தால் அவையனைத்தும் வணக்கமாகவே கருதப்படும். எனவே ஒரு உண்மையான இறை அடியான் உறங்குவதும் வணக்கமே. ஏனெனில் அவன் தூங்கும் போதும் நபிகளாரின் நடை முறைகளைக் கவனத்தில் கொண்டு தான் உறங்குவான், அப்போது தூக்கமும் வணக்கமாக மாறி விடுகின்றன.ஆக, மனிதப்படைப்பின் முழு நோக்கம், அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை அனைத்து செயல்களிலும் இறை திருப்தியை மட்டும் கவனத்திற் கொண்டு, அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பேணி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதேயாகும்.

யா அல்லாஹ்! உன் வழிகாட்டுதல்களைக் பின்பற்றி வாழ்ந்து மரணித்து, மறுமையில் சுவனத்தை அடையக் கூடிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!

ஒஸாமா பின் லாடன் வாஷிங்டனில் ...


அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால், அவருடைய பேச்சையோ அல்லது உரையாடல்களையோ கேட்டதோ, பார்த்ததோ இல்லை.

அவருடைய சமீபத்திய நேர்காணல் ஒன்றை தமிழில் எழுதும் சந்தர்ப்பம் அமைந்தது.  சென்ற மாதம் நான்காம் தேதி, ABC தொலைக்காட்சியின் "குட் மார்னிங் அமெரிக்கா" நிகழ்ச்சியில் பங்கேற்றார் அஹ்மதிநிஜாத். அவரை பேட்டி கண்டது பிரபல தொலைக்காட்சி செய்தியாளரான ஜார்ஜ் ஸ்டீபனோபவ்லோஸ் அவர்கள்.

அதிரடியான நேர்க்காணல் அது. 

அணு ஆயுத பரவல் உடன்பாட்டைப் பற்றிய கலந்தாய்வில் ஐக்கிய நாடுகள் சபையில் அஹ்மதிநிஜாத்,"ஈரானின் அணு செறிவு நடவடிக்கை உலகத்திற்கு அச்சுறுத்தல் இல்லை. மாறாக அமெரிக்காவே உலகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது" என்று உரையாற்றியதற்கு மறுநாள் இந்த நேர்காணல் நடைப்பெற்றது.

"அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்"என்று தன்னுடைய பேச்சை தொடங்கிய ஈரான் அதிபர், தன்னுடைய பதில்களால் பார்வையாளர்களை அசர வைத்தார்
அப்போது கேட்க பட்ட கேள்விதான்,
ஒசாமா பின் லேடன் ஈரானில் இருக்கின்றாராமே?
அதற்கு அஹ்மதிநிஜாத் அவர்கள் அளித்த பதில்,

"அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம்....."

இந்த பதில் உங்களுக்கு வியப்பை அளித்திருந்தால் இது தொடர்பான முழுமையான உரையாடலை தொடர்ந்து வாசியுங்கள்...

......ஒரு ஆவணப்படம் சமீபத்தில் வெளிவந்திருக்கின்றது, அது ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவிக்கின்றது. அதில் ஈரானில் வசிக்கும் அலன் பாரோட் என்ற நபர், 2003 ஆம் ஆண்டு முதல் பலமுறை ஒசாமா பின் லேடனுடன் தான் பேசியதாக குறிப்பிடுகின்றார். ஒசாமா பின் லேடன் தெஹ்ரானில் (Tehran-Capital of Iran) இருக்கின்றாரா?

(சிரிக்கின்றார்)...உங்கள் கேள்வி என்னை சிரிக்க வைக்கிறது.

ஏன்?

அமெரிக்க அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் நுழைந்ததே ஒசாமா பின் லேடனை பிடிக்கத்தான். அவர்களுக்கு பின் லேடன் எங்கிருக்கின்றார் என்று தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கு அப்படி தெரிந்திருக்கவில்லையென்றால் ஏன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைய வேண்டும்? 

அவர்களுக்கு தெரிந்திருந்தால் அவரை கண்டுபிடித்திருப்பார்கள். அவரைப் பிடித்திருப்பார்கள்.

முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று அறிந்து கொள்ள முயற்சித்திருக்க வேண்டும், பிறகு தான் நுழைந்திருக்க வேண்டும். அவர் எங்கிருக்கின்றார் என்றே தெரியாமல் ஒரு நாட்டிற்குள் நுழைந்து விட்டு பிறகு தேடுவதென்பது தர்க்க ரீதியாக ஒத்துவருகின்றதா? இது தர்க்க ரீதியாக சரியென்று உணர்கின்றீர்களா?

என் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே நான் கருதுகின்றேன். அவர் தெஹ்ரானில் இருக்கின்றாரா இல்லையா?

எங்கள் நிலை தெளிவாகவே இருக்கின்றது. சில பத்திரிக்கையாளர்கள், பின் லேடன் ஈரானில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் மற்றும் தீவிரவாதம் மீதான எங்கள் நிலைப்பாடு தெளிவாகவே இருக்கின்றது. 

அது உண்மையா இல்லையா?

உங்களுக்கு தெரிந்திருக்கலாம், எனக்குத் தெரியவில்லை. 

நான் உங்களை கேட்கின்றேன். நீங்கள் தான் ஈரானின் அதிபர். 

எனக்கு அப்படி எதுவும் தெரியாது. நீங்கள் தான் மிக விசித்திரமான செய்தியை சொல்லுகின்றீர்கள். 

சரி, நான் வேறு விதமாக கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா? 

ஒசாமா பின் லேடன் வாஷிங்டனில் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன். 

இல்லை. நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது.

ஆம், நான் கேள்விப்பட்டேன். அவர் அங்கு தான் இருக்கின்றார். ஏனென்றால் அவர் புஷ்ஷினுடைய பழைய பங்குதாரராக இருந்திருக்கின்றார். அவர்கள் தோழர்களாக இருந்திருக்கின்றார்கள். அது உங்களுக்கு தெரியும். அவர்கள் எண்ணெய் வியாபாரத்தில் ஒன்றாக ஈடுபட்டிருக்கின்றார்கள். ஒன்றாக சேர்ந்து பணி புரிந்திருக்கின்றார்கள். பின் லேடன் ஈரானுடன் ஒத்துழைத்ததே இல்லை, ஆனால் அவர் புஷ்ஷுடன் ஒத்துழைத்திருக்கின்றார் --

உங்களிடம் இன்னும் ஒரேயொரு முறை கேட்கின்றேன். ஒசாமா பின் லேடன் ஈரானில் இருப்பதாக உங்களுக்கு தெரிய வந்தால், நீங்கள் அவரை உபசரிப்பீர்களா அல்லது வெளியேற்றுவீர்களா அல்லது கைது செய்வீர்களா?

எங்களுடைய எல்லைகள் சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு மூடப்பட்டுள்ளன. அது யாராக இருபினும் சரி. .......ஒசாமா பின் லேடனாகட்டும், இல்லை வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். எங்கள் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. எங்கள் நிலை தெளிவாக உள்ளது. 

நீங்கள் உங்கள் வாழ்க்கையை, தினமும் வெளியாகும் செய்திக்கேற்ப அனுசரித்து செல்வது எனக்கு ஆச்சர்யத்தை தருகின்றது. இது போன்ற செய்திகளுக்கேற்ப தான் அமெரிக்க அரசாங்கம் தன் நிலைப்பாட்டை எடுக்கின்றதோ என்று வருத்தப்படுகின்றேன். அப்படியிருந்தால் அது மிகவும் வேதனையானது. 

செய்திகள் துல்லியமாக இருக்க வேண்டும், அப்படி இல்லையென்றால் அது இரு நாடுகளுக்கு மத்தியிலான உறவை பாதிக்கும், இதோ இது போன்று.

அமெரிக்க அரசாங்கத்திற்கு பின் லேடனின் இருப்பிடம் தெரிந்திருந்ததா? அதற்கு நீங்கள் என்ன கூறுகின்றீர்கள், "இல்லை, அவரை அங்கு கண்டுபிடிக்க சென்றார்கள் என்று".  முதலில் நீங்கள் அவர் இருப்பிடத்தை---

அவர்கள் பின்னடைந்து விட்டார்கள். 

அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறாரா என்று பார்க்க போனதாக கூறுகின்றீர்கள். முதலில் அவர் எங்கிருக்கின்றார் என்று தெரிந்துகொண்டு பிறகு அந்த நாட்டிற்குள் நுழைந்திருக்க வேண்டும். இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு நீதிபதி முதலில் ஒருவனை கைது செய்ய சொல்லி விட்டு பிறகு ஆதாரங்களை கேட்பது போலிருக்கின்றது. 

ஒசாமா பின் லேடன், தெஹ்ரானில் இல்லை என்று சொல்லுகின்றீர்கள்? 

அவர் வாஷிங்டனில் இருக்கின்றார். அவர் அங்கிருப்பதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். 

என்னால் உடன்பட முடியவில்லை.....

அஹ்மதிநிஜாத் அவர்களின் இது போன்ற பதில்கள் என்னை வியக்க வைத்தன.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் (Uranium enrichment) குறித்து நடந்த உரையாடல் இன்னும் சுவாரசியமானது.

அமெரிக்கா மட்டுமல்ல, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் கூட. நான் (ரஷ்ய) அதிபர் மெத்தடெவுடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் பேசினேன் அவரும் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கூறினார். ஈரான் அதிவிரைவாக தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றது. 

எங்கள் மீது திணிக்கப்படும் எந்த ஒன்றையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு அறிக்கையையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

மூன்று அல்லது நான்கு நாடுகள் அணுகுண்டுகள் வைத்துக்கொண்டு, ஆனால் மற்ற நாடுகள் அமைதியான முறையில் அணுசக்தி உற்பத்தி செய்வதை தடுப்பதென்பது சட்டத்தை மீறுவதாகும். இது அநியாயமானது. எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது.

காலம் கடந்து விட்டது, எங்களை அச்சுறுத்துவதன் மூலமோ அல்லது அழுத்தம் கொடுப்பதன் மூலமோ பணிய வைக்க முடியாது. அவர்களைப் பொறுத்தவரை சட்டத்திற்குட்பட்டு எங்களுடன் அனுசரித்து செல்வதே சிறந்தது. 

...நீங்கள் சர்வதேச சட்டங்களைப் பற்றி பேசுகின்றீர்கள், நட்பு மற்றும் நியாயங்களை பற்றி பேசுகின்றீர்கள். ஆனால், உலகில் பலரும் அணு ஆயுதங்கள் தொடர்பான உங்களது நிலையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியவில்லையா ? 

118 அணி சேரா உறுப்பினர்கள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றார்கள். 57 இஸ்லாமிய நாடுகள் எங்களது நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள், இவை அவர்களது கணக்கில் வரவில்லையா? 

ஆனால், விதிகளுக்குட்பட்டு ஏனைய நாடுகளும் அணு சக்தியை உபயோகப்படுத்தலாமென ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றது. 

இல்லை, அவர்கள் அப்படி செய்யவில்லை. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை (NPT) பொறுத்தவரை ஆயுதக் குறைப்பு நடந்திருக்க வேண்டும். எத்தகைய ஆயுதக் குறைப்பு இதுவரை நடந்து விட்டது?

NPT-ன் நான்காம் பிரிவை பொறுத்தவரை (Article IV), எல்லா உறுப்பு நாடுகளும், எந்த ஒரு முன் நிபந்தனைகளுமின்றி, தொழில்நுட்பம் மற்றும் அணு எரிபொருள் உற்பத்தி போன்றவற்றிற்கு பரஸ்பரம் உதவிக்கொள்ள வேண்டும்.

அதேபோல,  உறுப்பு நாடுகள் செறிவூட்டல் செய்வதை தடுப்பதற்கு எந்த ஒரு காரணமும் சொல்லக் கூடாது. இதுதான் NPT. அணு ஆயுதப் பரவல் உடன்பாட்டை வாசியுங்கள். 

உறுப்பு நாடுகள் தங்கள் வசதிகளை ஆய்வுக்கு அனுமதிக்க வேண்டுமே?

என்னைப் பேச விடுங்கள். இதுதான் NPT சொல்லுவது. இப்போது, சிலர் எங்களுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கவும், எங்களது நிலைப்பாட்டை கட்டாயப்படுத்தி மாற்றவும் முயற்சித்தனர். ஆனால் இவையெல்லாம் எங்களை கட்டுப்படுத்தாது. நேற்று எங்களது நிலைப்பாடு குறித்து பதிலளித்தேன், ஐக்கிய நாடுகள் சபையில் நேற்றைய தினம் நான் ஆற்றிய உரையை நீங்கள் வாசித்தீர்களேயானால் என்னுடைய பதில்களை அங்கேயே காணலாம். 

உங்களுடைய உரையை நான் வாசிதேன். அதுமட்டுமின்றி, ஒப்பந்தத்தில் நீங்கள் கையெழுத்திட்டதாக சொல்லியிருந்ததையும் வாசிதேன். ஆனால், IAEA (International Atomic Energy Agency, சர்வதேச அணுசக்தி கழகம்) ஒப்புக்கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் செயலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. நிச்சயமாக அமெரிக்க அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளவில்லை. 

எதற்காக உடன்பட மறுக்கின்றார்கள்? 

நீங்கள் உடன்பாட்டை எட்டவில்லை. அவர்கள் சொல்லுகின்றார்கள், நீங்கள் உங்கள் செயல்களை மாற்றிக்கொள்ள---

அவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை? நாங்கள் செறிவூட்டல் பண்ணுகின்றோமோ இல்லையோ, இதில் அவர்கள் ஏன் தலையிட வேண்டும்? நான்காம் விதி சொல்லுகிறது அவர்களுக்கு அந்த உரிமை இல்லையென்று.

கவனியுங்கள், தலைமை செயலாளரோ, IAEA -வின் மற்ற எந்தவொரு உறுப்பு நாடுகளோ, அல்லது எந்தவொரு அரசாங்கமோ நாங்கள் செறிவூட்டல் செய்வதை தடுக்க முடியாது. இது தெளிவாகவே இருக்கின்றது. அவர்கள் தான் சட்டத்தை மீறுகின்றார்கள். நாங்களல்ல. அவர்கள் NPT -ன் விதிகளை மீறுகின்றார்கள். அவர்கள் அப்படி செய்வது நியாயமுமல்ல.

விதிமுறைகளை மீற உங்களுக்கு எந்தவொரு  அதிகாரமும் கிடையாதென்று நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலரிடம் கூறினேன். 

உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விருப்பம். ஐக்கிய நாடுகள் சபை, ஈரானை மையமாக வைத்து இயங்கினால், அதன் தலைமைச் செயலர் இதையே கூறுவாரா 

இது----என்னால் இதற்கு பதில் சொல்ல முடியாது--- 

என்னை பேச அனுமதியுங்கள். 

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவில் எங்களுக்கு வீட்டோ அதிகாரம் இருந்தால், நாங்கள் பாதுகாப்பு ஆலோசனைக்குழுவின் நிரந்தர உறுப்பினராக இருந்தால், தலைமைச் செயலர் இதையே கூறுவாரா? அல்லது மாற்றிக் கூறுவாரா? 

இத்தகைய நியாயமற்ற விதிமுறைகளே பாதுகாப்பின்மை, போர்கள் போன்றவை தோன்றுவதற்கு அடிப்படை காரணமென்று நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம்.

சீர்திருத்தங்களுக்கு தெளிவான ஆலோசனைகளை நாங்கள் வைத்திருக்கிறோம். இன்றைய நிலையில், உலகின் பெரும்பான்மையான நாடுகள் நாங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்வார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குழு நிறுவப்பட்ட விதம் நியாயமில்லாதது என்றும் நினைக்கின்றார்கள்.

வீட்டோ அதிகாரம் உள்ள நிரந்தர உறுப்பினர்கள், கழகத்திடம் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது. IAEA வின் நிர்வாகிகள் சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ளவர்கள் தங்கள் கருத்துகளை திணிப்பது தெளிவாக தெரிகின்றது.

ஏன் அறுபது ஆண்டுகளுக்கு பின்னரும் ஆயுதக் குறைப்பு நிகழவில்லை? 

நான் உங்களை கேட்கிறேன். அணு குண்டுகள் வைத்திருப்பது அல்லது அணு குண்டு வைத்திருக்க முனைவது, இதில் எது மிகவும் ஆபத்தானது? 

நேற்று அமெரிக்கா "எங்களிடம் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகள் இருக்கின்றன" என்று அறிவித்தது. ஐந்தாயிரம் அணுகுண்டுகள் ஆபத்தானதா? அல்லது ஒரு நாடு அணுகுண்டு உருவாக்கலாமென்று எண்ணுவது ஆபத்தானதா? இதில் எந்தவொன்று உலக பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கின்றது? 

ஈரான் அதிபரின் வார்த்தைகள் தெளிவாக, கூர்மையாக வந்து விழுந்தன.

இஸ்ரேல் பற்றி உரையாடல் திரும்பிய போது,

உங்களிடம் உரையாடியதிலிருந்து எனக்கு என்ன புரிகிறதென்றால், நீங்கள் உங்கள் மீதான மற்றுமொரு நடவடிக்கைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இதை கவனிக்கும் பெரும்பாலானவர்களுக்கு தெளிவாக தெரிவது என்னவென்றால், ஈரான் தன்னுடைய தற்போதைய பாதையை தொடர்ந்தால், இஸ்ரேல், பிரச்னையை தானே எதிர்க்கொள்ள முன்வரும். ஈரானின் அணு திட்டங்களை இராணுவத்தின் மூலம் எதிர்க்கொள்ளும். 

ஈரான் தற்போது எந்த பாதையில் செல்கின்றதோ, அதே பாதையில் தொடர்ந்து செல்லும். அதில் உங்களுக்கு எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். 

ஆனால், நீங்கள் நெருப்போடு விளையாடுவதாகத் தெரியவில்லையா?, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளைப் பற்றி கவலை இல்லையா?

இல்லை .

ஏன்?

குண்டுகளை குவித்துக் கொண்டும், தங்கள் விருப்பங்களை மற்றவர்கள் மேல் திணித்துக்கொண்டும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் அவர்கள் தான் நெருப்புடன் விளையாடுகின்றார்கள்.

நாங்கள் குண்டுகளை குவித்து வைத்திருக்கின்றோமா? எங்களிடம் அணு குண்டுகள் இருக்கின்றதா?, அணு குண்டை இதுவரை உபயோகப்படுத்தியது யார்?, யார் தங்களிடமுள்ள குண்டுகளை வைத்து மற்றவர்களை அச்சுறுத்துவது?, நாங்களா அல்லது அமெரிக்க அரசாங்கமா? 

இராணுவ நடவடிக்கைப் பற்றி?

பேச விடுங்கள். யார் ஆபத்தானவர்கள்? யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

என்னையா ?

ஆம், உங்களைத் தான் கேட்கின்றேன். யார் எங்கள் மீது போர்த்தொடுக்க நினைப்பது?

இல்லை. ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாமென்று தான் சொல்லுகின்றேன். 

இவ்வாறு நீங்கள் சொல்லும்போது உங்களிடம் நான் கேட்க விரும்புவது, எங்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுப்பார்களென்று யாரை தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள்? அமெரிக்காவையா? அமெரிக்கா எங்களைத் தாக்க போகின்றதா? 

இல்லை. நான் கேட்டது, நீங்கள் இது பற்றி கவலைக் கொள்ளவில்லையா என்று? 

நீங்கள் இது வரை இதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றீர்களா?

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்...

நாங்கள் இஸ்ரேலை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. 

அப்படி ஒருவேளை அது நடந்தால் உங்களிடம் எந்த திட்டமும் இல்லையா?

அவர்கள் முடிந்து விட்டார்கள். சியோனிஸ ஆட்சி முடிந்து விட்டது. அவர்களால் காசாவைக் கூட சமாளிக்க முடியவில்லை. எங்களிடம் வரப்போகின்றார்களா? எல்லோருக்கும் இது தெரியும். பத்திரிகைத் துறையில் வல்லுனரான உங்களுக்கு இது தெரியாமல் இருப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கின்றது. உலக அரசியல் வல்லுனர்கள் அனைவருக்கும் இது தெரியும்.

சியோனிஸ ஆட்சியால் காசாவை சமாளிக்க முடியவில்லை. எங்களுடன் பிரச்னைக்கு வருவார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

ஆக, நீங்கள் ஐக்கிய நாடுகள் சபை பற்றி கவலைப்படவில்லை. இஸ்ரேல் பற்றியும் கவலைப்படவில்லை. நீங்கள் உங்கள் நாட்டில், உங்களுக்கு எதிராகவுள்ள மக்களைப் பற்றியாவது கவலைப்படுகின்றீர்களா?, இதற்கு ஆதாரம் உள்ளது. ஏனென்றால், வெளிப்புற பார்வையாளருக்கு, ஈரானிய அரசின் நடவடிக்கைகள், அவர்கள் போராடுபவர்களை சிறையிலிடுவது, போராடுபவர்களை தூக்கிலிடுவது போன்றவை உங்கள் அரசுக்கு எதிராக மக்கள் இருப்பதைக் காட்டுகின்றது. நீங்கள் இது பற்றி கவலைக் கொள்வதாக தெரிகின்றது. 

எந்த நாடு எங்களைத் தாக்கும் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? இது போன்றதொரு பாதுகாப்பைத் தான் அமெரிக்கா உலகில் ஏற்படுத்தியிருக்கின்றதா? இத்தகைய நாகரிகத்தை தான் அமெரிக்கா உலகிற்கு பரிசாக கொடுத்துள்ளதா? இது தான் அமெரிக்க சுதந்திரம் மற்றும் ஜனநாயகமா?

நாங்கள் சுதந்திரமானவர்கள், எங்கள் நாடுகளில் எங்கள் விஷயங்களை கவனித்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மற்றவர்களின் தாக்குதலைப் பற்றி நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? சியோனிஸ ஆட்சியிடமிருந்து? அமெரிக்காவிடமிருந்து?

நீங்கள் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றீர்கள் என்று புரிந்திருக்கவில்லையா? உங்கள் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை, திருமதி கிளிண்டனுக்கும் புரியவில்லை. இல்லை, இங்கே என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்கள் நாட்டைப் பற்றி எந்த மாதிரியான பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை.

ஏழாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த நாடான ஈரான், என்றென்றும் அமைதி மற்றும் நட்பையே விரும்பி இருக்கின்றது, நாகரிகத்தின் மத்தியில் இருந்த நாடு. எந்த ஒரு நாட்டின் மீதும் படையெடுத்ததில்லை, எப்போதும் நியாயத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றது. ஆனால் நீங்கள் சொல்கின்றீர்கள் நாங்கள் அச்சத்திற்கு நடுவே வாழ வேண்டுமென்று.

நீங்கள் பிரதிபலிக்கக்கூடிய அமெரிக்காவைப் பற்றிய பிம்பம் சரியானதன்று. அமெரிக்காவை எதிர்ப்பது ஈரான் மட்டுமன்று. அமெரிக்காவின் நடவடிக்கையால் எல்லா நாடுகளும் அதை எதிர்க்கின்றன. ஐரோப்பாவில் மட்டும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகத்தான் இருப்பார்கள் என்று நான் உறுதி கூறுகிறேன்.

அவர்கள், ஈரான் அச்சத்துடன் தான் வாழ வேண்டுமென்று சொல்லுகின்றார்கள். எதற்காக? எதற்காக அவர்கள் எங்களை தாக்க நினைக்க வேண்டும்?

தீவிரவாதம் மற்றும் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து அவர் கூறியது,

நீங்கள் அமைதியை விரும்புவதாக சொல்லுகின்றீர்கள். ஒரு முஸ்லிமாக நீங்கள் தீவிரவாதத்தை எதிர்ப்பதாக சொல்லுகின்றீர்கள். இங்கே அமெரிக்காவில், டைம்ஸ் சதுக்கத்தை குண்டு வைத்து தகர்க்க முயற்சி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் தாலிபான் இயக்கம் அமெரிக்க நகரங்களை தாக்கப் போவதாக சொல்லியிருக்கின்றது. ஒரு முஸ்லிமாக இவற்றை நீங்கள் எதிர்க்கின்றீர்களா? 

நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம். மிக கடுமையாகவே எதிர்க்கின்றோம். நாங்கள் ஏராளமானவர்களை தீவிரவாதத்திற்கு பலி கொடுத்து விட்டோம். ஈரானில் அதிபர், பிரதமர், சட்டத்தலைவர், 26 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான மக்கள் என்று பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அதே சமயம் அது சட்டத்திற்குட்பட்டு நடக்க வேண்டும்.

உங்களிடம் நான் கேட்கின்றேன். அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் நுழைந்து இது பத்தாவது வருடம். தீவிரவாதம் குறைந்திருக்கின்றதா, அதிகமாகி இருக்கின்றதா?. அமெரிக்காவின் அணுகுமுறை தவறென்று தெளிவாக தெரிகின்றது. அமெரிக்கா உள்ளே நுழைந்ததிலிருந்து இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தீவிரவாதமும் பெருகி இருக்கின்றது.

சமீபத்தில் 400 ஈரானியர்களை கொன்ற ரெகி என்பவனை நாங்கள் கைது செய்தோம். அவன் எங்கே ஒளிந்திருந்தான்?, பாகிஸ்தானிலா?, இல்லை ஆப்கானிஸ்தானிலா? யார் அவனுக்கு ஆதரவளித்தது? அமெரிக்க இராணுவம் தான்.

இது மிகவும் மோசமானது. ஏன் இப்படியிருக்க வேண்டும்? நாங்கள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றோம், அப்பாவி மக்களின் வாழ்விற்கு அச்சுறுத்தலாய் இருப்பதை எதிர்க்கின்றோம். 
பேட்டி முழுவதும் மிகுந்த நிதானத்துடன் பதிலளித்தார் மஹ்மூத் அஹ்மதிநிஜாத். ஈரான் அதிபரின் உரையாடலிருந்து நான் புரிந்து கொண்டது,
  • ஈரானிய அரசாங்கம், தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கின்றது.
  • யாரையும் பார்த்து அச்சப்படும் நிலையிலும் அவர்கள் இல்லை.
  • தாங்கள் செய்வது சட்டத்திற்கு உட்பட்டது என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

இந்த நேர்க்காணல் குறித்து ABC ஊடகத்தின் இணையத்தளத்தில் கருத்து தெரிவித்த பலரும் ஈரான் அதிபரின் வாதங்களில் அர்த்தம் இருப்பதாக குறிப்பிட்டனர்.

ஒரு அமெரிக்கர் அந்த தளத்தில் கூறியது,
இந்நாட்களில் அமெரிக்கா தான் உண்மையான எதிரியாக கருதப்படுகிறது.
நாம் மற்ற நாடுகள் மீது போர்த்தொடுத்து அவர்கள் எப்படி வாழ வேண்டுமென்று சொல்லவேண்டுமா?, நாம் மற்றவர்களுக்கு செய்வது போல, யாராவது நமக்கு செய்தால் நாம் என்ன நினைப்போம்?
அமெரிக்க வீரர்களை திரும்ப பெறுங்கள். அந்த நாடுகளை நிம்மதியாக வாழ விடுவோம். பிறகு நாமும் நம்முடைய வாழ்வை அமைதியான முறையில் அமைத்துக் கொள்வோம்.

புரிய வேண்டியவர்களுக்கு என்று புரியுமோ?....

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.... 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More