நவீன காலத்தில் ஏகாதிபத்தியத்தின் அராஜகத்தால் பாதிக்கப்படுவோர் பலவிதத்தில் உள்ளனர்.ஆப்கானிஸ்தான் குடிமக்கள் முதல் ஈராக்கின் அதிபராக பதவி வகித்த சதாம் ஹுஸைன் வரை ஏராளமானோர் ஏகாதிபத்தியத்தின் பலிகடாக்களாவர்.
முதலாளித்துவம் உலகமெங்கும் பரவிய காலம் முதல் அதன் சுய விருப்பங்களுக்கு அடிபணிய மறுத்தவர்களை நிம்மதியாக வாழ விட்டதில்லை.
அன்றிலிருந்து இன்றுவரை முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம் என கூறுகின்றன. ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் ஆட்சியாளர்களை தூக்கியெறிந்து, லட்சக்கணக்கான மக்களை படுகொலைச்செய்து, அந்நாட்டின் வளங்களை கொள்ளையடித்த பிறகும் அவர்கள் கூறுவது என்னவெனில் நாங்கள் சுதந்திரத்தின் சுவிஷேசகர்கள் என்பதாகும்.
ஜனநாயகத்தையும், நாகரீகத்தையும், நவீன காலத்தின் மதிப்பீடுகளையும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு கற்றுக்கொடுக்கவந்தோம் எனவும் கூறிக்கொள்கிறார்கள். இந்த பெரும் பொய்யை சில மேற்கத்திய ஊடகங்களும், மூளைக்குழம்பிய சில வலதுசாரி அறிவுஜீவிகளும் இந்த காலத்திலும் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
ஆப்கானிலும், ஈராக்கிலும் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தி சில மேற்கத்திய அறிஞர்கள் எழுப்பிய வாதங்களும் இதுவேயாகும். ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளுக்கு பலியானவர்களுக்கே இது முழுக்க முழுக்க கட்டுக்கதை என்பது தெளிவாக தெரியும்.தற்பொழுது மேற்கத்திய சமூகத்தின் அதன் அறிவுரீதியான தொழில்நுட்பரீதியான வெற்றியின் சந்ததியான விக்கிலீக்ஸிற்கு இதே கதிதான் ஏற்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் மேற்கத்திய ஊடகங்களுடன் உலகின் பல்வேறு ரகசியங்களை வெளிக்கொணர்ந்தது.கென்யாவின் ஊழல், ஐவரிகோஸ்டின் இராசயன கழிவுகளை கடலில் கொட்டியது, குவாண்டனாமோ சிறையில் நடக்கும் மனிதத்தன்மையற்ற சித்திரவதைகள், ஈராக், ஆப்கான் போர் ரகசியங்கள் என பல்வேறு ரகசிய செய்திகளை விக்கிலீக்ஸ் வெளிச்சம்போட்டு காட்டியது. மக்களின் தகவல்களை அறிந்துக்கொள்ளும் உரிமையை சரியான முறையில் பயன்படுத்தியது விக்கிலீக்ஸ். பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்களின் உண்மையான முகத்தை மக்களுக்கு முன்னால் திறந்து வைத்தது. சரி எது? தவறு எது? என்பதை அடையாளம் காணவும் தெளிவான நிலைப்பாடுகளை மேற்கொள்ளவும் அது உலக மக்களுக்கு உதவியது.
ஆனால், விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்டதன் மூலம் கதை மாறியது. இப்பொழுது அமெரிக்காவிற்கு உஸாமாவை விட மிகப்பெரிய தீவிரவாதி ஜூலியன் அஸாஞ்ச் ஆவார். கருத்து சுதந்திரத்தின் காவலாளிகள் எனக்கூறும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் இரட்டைவேடம் விக்கிலீக்ஸ் விவகாரத்தில் கலைந்தது.
விக்கிலீக்ஸிற்கு பொருளாதார உதவிகள் வரும் அனைத்து வழிகளையும் அமெரிக்காவும் அதன் கூட்டணிநாடுகளும் அடைத்துவிட்டன.அஸாஞ்ச் மீது ஏராளமான வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்கான எவ்வித வழியும் யாருக்கும் இனி கிடைக்க வாய்ப்பில்லை. ஏகாதிபத்தியத்தின் கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து விக்கிலீக்ஸ் தனது செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
ஆனால், அது வேட்டைக்காரர்களின் கடைசி வெற்றியாக மாறிவிடக்கூடாது. ஏனெனில் விக்கிலீக்ஸ் திறந்த மனங்களைக்கொண்ட சமூகத்தினருக்கு இன்றியமையாததாகும். அதற்கெதிரான அரசு பயங்கரவாதத்தை உலகம் எதிர்த்தே ஆகவேண்டும்!
0 comments:
Post a Comment