ஈத் என்றால் விழா அல்லது மீண்டும் மீண்டும் வரும் மகிழ்ச்சி என்று பொருள். முஸ்லிம்கள் அனைவருக்கும் பெருநாள் தொழுகை மிக முக்கியமானதாகும். இது அன்றாடத் தொழுகையின் சிறப்புக்களையும், ஜும்ஆத் தொழுகையின் பலன்களையும் கொண்டது. இது முஸ்லிம்களின் பிணைப்புகளை வலுப்படுத்தும் தன்மையைக் கொண்டது.
பெருநாள்கள் இரண்டு முதலாவது ‘ஈதுல் பித்ர்’ என்று சொல்லப்படும் நோன்புப் பெருநாளாகும். அது ரமளான் மாதத்தை அடுத்துவரும் (முஸ்லிம் ஆண்டின் 10-வது மாதம்) ஷவ்வால் மாதம் முதல் நாளில் வரும். ரமளான் மாதத்தில் தான் குர்ஆன் அருளப்பட்டது. அதே மாதத்தில் தான் நோன்பும் நோற்கப்படுகின்றது. இரண்டாவது பெருநாள் ’ஈதுல் அள்ஹா’ (தியாகப் பெருநாள்) முஸ்லிம் ஆண்டின் இறுதி மாதமான ‘துல்ஹஜ்’ பத்தாம் நாளில் இது வருகிறது. இது ஹஜ் கடமையின் (மக்கா யாத்திரை) நிறைவை ஒட்டி கொண்டாடப்படுவதாகும்.
இஸ்லாமியப் பெருநாட்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததாகும். வேறு எந்த மதத்திலும் அல்லது சமூக, அரசியல் அமைப்பிலும் இதற்கு ஈடான ஒன்றைக் காண முடியாது. மிக உயர்ந்த ஆன்மீக ஒழுக்கத் தன்மைகளோடு தனிப்பண்புகள் பலவற்றையும் அவை பெற்றிருக்கின்றன.
இஸ்லாமியப் பெருநாட்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததாகும். வேறு எந்த மதத்திலும் அல்லது சமூக, அரசியல் அமைப்பிலும் இதற்கு ஈடான ஒன்றைக் காண முடியாது. மிக உயர்ந்த ஆன்மீக ஒழுக்கத் தன்மைகளோடு தனிப்பண்புகள் பலவற்றையும் அவை பெற்றிருக்கின்றன.
1. இறைவனுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் ஆற்றிய கடமையின் நிறைவைக் கொண்டாடுவது தான் ஈதின் நோக்கமாகும். முதல் பெருநாள் ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்காகக் கொண்டாடப்படுகின்றது.
2. தங்களுடைய ஆன்மீகக் கடமைகளைப் பூர்த்தி செய்வதில் இறைவன் உதவியதற்காக அவனுக்கு நன்றி சொல்லும் முகத்து, முஸ்லிம்கள் அனைவரும், சகோதரத்துவ உணர்வோடும், மன மகிழ்ச்சியோடும் கூடும் நாள் தான் ஈத் என்பதாகும். இவ்வாறு நன்றி செலுத்துவது வெறும் பேச்சோடு முடிந்து விடுவதில்லை. அதற்கப்பாலும் சென்று அது சமூக உணர்வுகளையும், மனிதாபிமான உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. ரமளான் மாதத்து நோன்பினை வெற்றிகரமாக நிறைவு செய்த முஸ்லிம்கள் ஏழை எளியவர்களுக்கு நோன்பு பெருநாளில் தானதர்மங்கள் செய்வதன் மூலமாக (இறைவனுக்குத்) தங்களது நன்றியை வெளிப்படுத்துகின்றார்கள்.
அதுபோலவே (ஹஜ் பெருநாள்) ‘ஈதுல் அள்ஹா’ அன்று ஹஜ் கடமையை நிறைவேற்றிய முஸ்லிம்களும் ஏனைய முஸ்லிம்களும் புசிப்பதற்குத் தகுந்த பிராணிகளை அறுத்து எளியவர்களுக்கு பங்கீட்டித் தந்து (குர்பான்) தங்களுடைய நன்றியை வெளிப்படுத்துகின்றார்கள். தானதர்மங்களையும், குர்பானி பொருட்களையும் வழங்குவது பெருநாட்களின் மிக முக்கியமான அம்சங்களாகும். இவ்வாறு நன்றி செலுத்துவது ஆன்மீக உணர்வையும், மனிதாபிமான உணர்வையும் ஒருங்கிணைக்கும் ஒரு உன்னத செயலாகும். இந்த மாண்பினை இஸ்லாத்தை தவிர வேறு எங்கும் காணவியலாது.
3. ஒவ்வொரு பெருநாளும் இறைவனை நினைவு கூறும் புனிதத் திருநாளாகும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் வேளையிலும், முஸ்லிம்கள் இறைவனைத் தொழுதே அந்த நாளை தொடங்குகின்றார்கள். இறைவன் தங்களுக்கு அருளிய நலன்களையும், பலன்களையும் நினைவு கூறும் வகையில் அவனைத் தொழுது அவன் திருநாமத்தைப் போற்றிப் புகழ்கிறார்கள். அதோடு இறந்து போனவர்களின் ஆத்ம நலனுக்காகவும் இறைவனிடம் இறைஞ்சுகிறார்கள்.
வறியவர்களுக்கு உதவி செய்கிறார்கள். துன்பங்களில் உழல்பவர்களுக்கு கருணை காட்டுகிறார்கள். நோயுற்றவர்களை சென்று பார்த்து அவர்களுக்கு ஆறுதல் கூறுகின்றார்கள். தங்களைப் பிரிந்து வெளியூர்களுக்குச் சென்றுள்ள நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துக்கள் அனுப்பி அவர்களையும் எண்ணிப் பார்க்கின்றார்கள். இப்படி எல்லோரையும் எண்ணிப் பார்க்கின்ற ஒருநாளாக ஈதுப் பெருநாள் இலங்குகின்றது.
4. ஒவ்வொரு ஈதுப் பெருநாளும் ஒரு வெற்றித் திருநாளாகும். தனது கடமைகளை நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் நிறைவேற்றி வந்த ஒவ்வொருவரும் வெள்ளியாளராவார். அவர் தமது ஆசைகளின் மீது பலமான கட்டுப்பாடு உள்ளவராகவும், சுயகட்டுப்பாடு உள்ளவராகவும், சுயகட்டுப்பாடு கொண்டவராகவும், கட்டுப்பாடான வாழ்க்கையை விரும்புபவராகவும் இருக்கிறார் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகின்றார். ஒருவர் இத்தகைய பண்புகளை பெற்றுவிட்டால், அவர் ஒரு மாபெரும் வெற்றியை அடைந்து விட்டார் என்று அர்த்தமாகும். ஏனெனில் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளவும், தன்னுடைய ஆசைகளை முறைப்படுத்திக் கொள்ளவும் அறிந்துகொண்ட ஒருவர் பாவம், தவறு, அச்சம், பலவீனம், கேவலம், பொறாமை, பேராசை, ஏளனம் இன்னும் இவை போன்றவற்றிலிருந்து விடுபட்டவராவார். இந்த விடுதலையின் அடையாளமே ‘ஈத்’ பெருநாளாகும். இந்த பெருநாளை வரவேற்கும்போது அவர் உண்மையிலேயே தனது வெற்றிக்கு விழா எடுக்கின்றார் என்றே பொருள். ஆகவே ஈத் எனும் பெருநாள் ஒரு வெற்றித் திருநாளாகும்.
5. ஒவ்வொரு ஈத் பெருநாளும் நன்மைகளின் அறுவடை நாளாகும். இறைபணியில் ஈடுபட்டிருந்த நல்லடியார்கள், நம்பிக்கையாளர் அனைவரும் தங்களது நற்செயல்களுக்கான பலன்களை அந்தப் பெருநாளன்று அறுவடை செய்கின்றார்கள். இறைவனும் தனது கருணையையும் பாக்கியங்களையும் வாரி வழங்குகின்றான்.
சகோதரத்துவம், அன்பு, பரிவு, பாசம் இவற்றை முஸ்லிம்கள் ஏனையோருடன் பரிமாறிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பெருநாளிலும் எல்லா முஸ்லிம்களுமே நன்மையை அடைகிறார்கள். தன்னைப் போன்ற நம்பிக்கையாளர்களின் நலனில் அக்கறை கொள்ளும் நம்பிக்கையாளர்களுக்கு அன்று இறைவன் தன் அருட்கொடைகளை அள்ளித் தருகின்றான். வறியவர்களுக்கு அன்றைய தினம் இறைவனின் அருளோடு சக நம்பிக்கையாளர்களின் அன்பளிப்புகளும், அன்பும் கிடைக்கின்றன. ஆகவே ஒவ்வொரு பெருநாளும் இறைவனின் கருணை, அன்பு ஏனைய முஸ்லிம்களின் அன்பளிப்பு, பாசம், பரிவு இவற்றின் அறுவடை நாளாகும்.
6. ஒவ்வொரு ஈத் பெருநாளும் பாவமன்னிப்புப் பெறும் நாளாகும். முஸ்லிம்கள் அனைவரும் பெருநாள் தொழுகைக்கு ஒன்றாக கூடும்போது, இறைவனிடம் மன்னிப்புக் கோருகின்றார்கள். தங்களது நம்பிக்கை மேலும் உறுதிபெற இறைஞ்சுகின்றார்கள்.
தூய்மையான உள்ளத்தோடு தன்னிடம் கோருகின்றவர்களுக்கு மன்னிப்பு அருளுவதாக இறைவன்உறுதி கூறுகின்றான். பெருநாள் தொழுகைகாக குழுமுகின்ற அந்த புனிதக் கூட்டத்தில், இன்னொரு நம்பிக்கையாளருக்கு எதிரான எண்ணங்களை கொள்வதற்கு ஒரு முஸ்லிம் வெட்கப்படவே செய்வார். சகோதரத்துவமும் ஆன்மீகமும் ஒருங்கிணைந்து விளங்கும் இந்தக் கூட்டத்தில் மகிழ்ச்சியும் நல்லெண்ணமுமே எல்லோர் உள்ளத்திலும் இருக்கும். தீய எண்ணங்கள் எதுவும் அவர்களின் உள்ளங்களில் இருக்காது. அப்படி ஏதேனும் தீய எண்ணங்கள் ஒருவரிடம் தலைதூக்குமேயானால், அதனை அவர் அகற்றிடுவார். தன்னுடைய இதயத்தையும் ஆன்மாவையும் தூய்மைப்படுத்துவதற்காக பெருநாளின் புனிதமான சூழ்நிலையில் அவர் மற்றவர்களுடன் கலந்து பழகுவார். இந்த நல்ல நாளில் தனக்கு தீங்கிழைத்தவர்களை அவர் மன்னிப்பார். ஏனெனில் அவர் இழைத்த தவறுகளுக்காக அவரும் இறைவனிடம் மன்னிப்புக் கோரும் நாளாகும் அது. இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்காக தன்னால் முடிந்ததையெல்லாம் அவர் செய்கிறார். இறையச்சம் மிகுந்திருக்கும் இந்தக் கூட்டத்தின் புனிதமான நிலை, அவர் மற்றவர்களை மன்னித்தால் அவரை இறைவன் மன்னிப்பான் என்ற தத்துவத்தை அவருக்கு புகட்டுகின்றது. அவர் மன்னிக்கும்போது இறையருள் அவருக்கு கிடைக்கின்றது. இப்படி ஒவ்வொரு பெருநாளும் பாவமன்னிப்பு பெறும் நாளாகிறது.
7. ஒவ்வொரு பெருநாளும் ஓர் அமைதி நாளாகும். இறைவனின் வழிகாட்டுதலின் வழி வாழ்வதன் மூலம் ஒரு முஸ்லிம் தன் இதயத்திலே அமைதியை நிலைநாட்டுகின்றார். இதன் மூலம் இறைவனுடன் ஓர் அழிக்க முடியாத அமைதி உடன்படிக்கையை செய்து கொள்கிறார். இதன் விளைவாக அவர் தன்னை சுற்றியுள்ள உலகத்தோடும் அமைதியோடு வாழ்கிறார். ஒருவர் ஈத் எனப்படும் பெருநாளை மன மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார் என்றால், அவர் இறைவனுடன் தான் கொண்ட அமைதி உடன்படிக்கையை நிறைவேற்றுகின்றார் என்றே பொருள். ஆகவே ஈத் எனப்படும் பெருநாள் ஓர் அமைதித் திருநாளாகும்.
இதுவே பெருநாட்களின் பொருளாகும். அது ஒரு அமைதி நாள். நன்றி செலுத்தும் நாள். மன்னிப்பு நாள். வெற்றியின் விழா நாள். நன்மையை அறுவடை செய்யும் நாள். சாதனைகள் நிறைவடைந்த நிறைவு நாள். நல்லோர்களையும், நண்பர்களையும் நினைவுகூரும் நாள். இவற்றிற்கெல்லாம் மேலாக அது இஸ்லாத்தின் நாள். இறைவனின் நாள்
0 comments:
Post a Comment