தியாக திருநாள் நல்வாழ்த்துகல்(அதிரை ரிபோர்டு நண்பர்கள்)

HTML lessons

Sunday, August 14, 2011

அமெரிக்கத் துணைத்தூதரின் இனவெறிப் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது : திருமாவளவன்


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
  ’’சென்னையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றும் மௌரீன் ச்சாவ்  என்ற அம்மையார் தமிழர்களை இழிவுபடுத்தும்விதமாகப் பேசியிருக்கிறார். 

சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவர்களிடையே வெள்ளியன்று (12.08.2011) பேசும்போது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தாம் ஒரு மாணவியாக இருந்தபோது டெல்லியிலிருந்து ஒரிசாவுக்குப் புகைவண்டியில் பயணம் செய்ததாகவும் இருபத்து நான்கு மணி நேரத்தில் போகவேண்டிய அந்தப் புகைவண்டி 72 மணி நேரம் கழிந்தும்கூடப் போய்ச் சேரவில்லை என்றும் அந்தப் பயணத்தால் தனது சருமம் தமிழர்களைப்போல கறுப்பாகவும் அசிங்கமாகவும் மாறிவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்கத் துணைத்தூதரின் இந்தப் பேச்சு இனவொதுக்கல் தன்மை கொண்ட முறை தவறிய பேச்சு என்பதில் ஐயமில்லை. 

இதற்காக அமெரிக்கத் தூதரகம் வருத்தம் தெரிவித்திருக்கிறது என்ற போதிலும் இவ்வளவு இங்கிதமற்ற ஒருவர், இத்தனை முக்கியமான பொறுப்பில் இருப்பது இந்திய அமெரிக்க ராஜீய உறவுகளை நிச்சயம் பாதிக்கும்.

இனவெறியை வெளிப்படுத்தும் விதமாகத் தமிழர்களை இழிவுபடுத்தியிருக்கும் மௌரீன் ச்சாவ் அம்மையார் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும். அத்துடன் அவரை அமெரிக்க அரசு உடனடியாகத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்.


அண்மையில் அமெரிக்க அதிபருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  ஹிலாரி கிளிண்டன் தமிழகத்துக்கு வந்து தமிழக முதல்வரோடு பேச்சு நடத்தினார். ஈழத் தமிழர்கள் குறித்து அப்போது அவர் சாதகமாகக் கருத்து தெரிவித்தார். ராஜ்பக்ச அரசின்மீது போர்க்குற்ற விசாரண நடத்தப்படவேண்டும் என்று அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்துக்கொண்டிருப்பது தமிழர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அமெரிக்கத் துணைத்தூதரின் இந்த ‘ இனவெறிப் பேச்சு ‘ அதிர்ச்சியளிக்கிறது.


அமெரிக்கத் துணைத் தூதர் மௌரீன் ச்சாவ் அம்மையார் தனது இனவெறிப் பேச்சுக்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் அமெரிக்க அரசு துணைத்தூதர் மௌரீன் ச்சாவ் அம்மையாரை உடனடியாகத் திரும்ப அழைத்துக்கொள்ளவேண்டும் என்றும் இந்திய அரசு அமெரிக்கத் தூதரை அழைத்துத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்யவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More